சனி, 25 ஜூன், 2016

பீட்ரூட் மசாலா

தேவையான பொருட்கள்:
  • பீட்ரூட் – கால் கிலோ
  • சிறிய  வெங்காயம் – 10
  • பூண்டு (நசுக்கியது) – 3 பல்
  • தக்காளி – 1
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் –1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
  • எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சோம்பு  – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு


செய்முறை:

  1. முதலில் பீட்ரூட்டை தோலுரித்து, நன்கு கழுவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். 
  2. கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 
  3. தக்காளி சேர்த்து குழைய வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். 
  4. பின் காயைச் சேர்த்து நன்றாக வதக்கி, கால் கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மூடி போட்டு வேக விடவும். இடையிடயே கிளறி விட்டு, காய் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சோள அடை

தேவையான பொருட்கள்:

  • நாட்டு சோளம் – 1 கப்
  • உளுத்தம்பருப்பு  – கால் கப்
  • துவரம் பருப்பு – ½ கப்
  • கடலைப்பருப்பு – ½  கப்
  • காய்ந்த மிளகாய் – 10
  • சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – ½ கப்
  • இஞ்சி – 1” துண்டு
  • பெருங்காயம் – 1 டீஸ்பூன் 
  • மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – 3 டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்    
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
  1. சோளம், உளுத்தம்பருப்பு சேர்த்துக்  கழுவி, களைந்து நான்கு மணி நேரம் தன்ணீரில் ஊற வைக்கவும். 
  2. அதே போல், மற்ற பருப்புகளையும் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 
  3. பிறகு சோளம், உளுந்தை காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 
  4. ஊற வைத்த பருப்புகளை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 
  5. இரண்டு மாவுக்கலவையையும் ஒன்றாகச் சேர்த்து, மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, கெட்டியான இட்லி மாவுப் பதத்திற்கு கலக்கவும்.
  6. அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, இரு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். 

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மசாலா இட்லி

தேவையான பொருட்கள்:
  • இட்லி – 5
  • பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
  • தக்காளி (பொடியாக நறுக்கியது)   – 1
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
  • நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
  1. முதலில் இட்லியை சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். 
  2. ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். 
  3. பிறகு வெங்காயம் சேர்த்து, நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும். 
  4. தக்காளி சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 
  5. பின் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து மசாலா திக்காகும் வரை கிளறவும். 
  6. இத்துடன் இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள சட்னி எதுவும் தேவையில்லை.

குறிப்பு: இட்லியில் உப்பு இருப்பதால் கவனமாக உப்பு சேர்க்க வேண்டும். 

சனி, 2 ஏப்ரல், 2016

ராகி ப்ளேக்ஸ் கீர் | ராகி அவல் பாயசம்

தேவையான பொருட்கள்:
  • ராகி ப்ளேக்ஸ் – அரை கப்
  • பால் – 2 கப்
  • நெய் – 2 டீஸ்பூன்
  • துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை – ½ கப்
  • ஏலக்காய்– 2  
  • முந்திரி, பாதாம் – தேவையான அளவு

செய்முறை:
  1. முதலில் தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். 
  2. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, ராகி ப்ளேக்ஸ் சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். 
  3. இத்துடன் கொதிக்க வைத்த பால் சேர்த்து ராகி ப்ளேக்சை வேக விடவும். 
  4. ராகி ப்ளேக்ஸ்  வெந்தவுடன் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து வைத்த நட்ஸை கலந்து, அலங்கரித்து பரிமாறவும்.

புதன், 17 பிப்ரவரி, 2016

முளைக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள்:
  • முளைக்கீரை – 1 கட்டு
  • வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
  • தக்காளி (பொடியாக நறுக்கியது) – 1
  • பச்சை மிளகாய் (கீறியது) – 2  
  • பாசிப்பருப்பு – அரை கப்
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
அரைக்க:
  • தேங்காய் துருவல் – 2  டேபிள்ஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க:
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1 
செய்முறை:
  1. கீரையை நன்றாக மண் போக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
  2. பாசிபருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். 
  3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  4. பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  5. இத்துடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் வேக வைத்த பாசிபருப்பை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும். 
  6. கீரை முக்கால்வாசி வெந்ததும், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.  

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ரவா லாடு

தேவையான பொருட்கள்:
  • ரவை – 1 கப்
  • சர்க்கரை – முக்கால் கப்
  • நெய் – அரை கப்
  • ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • பாதாம், முந்திரி (பொடித்தது) – தேவையான அளவு

செய்முறை:
  1. முதலில் ரவையை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். 
  2. சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 
  3. ஒரு அகலமான பேசினில் ரவை, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 
  4. கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடித்த முந்திரி, பாதாமை வறுத்து எடுத்து மாவுடன் கலந்து வைக்கவும். 
  5. பிறகு அதே கடாயில் மீதமுள்ள  நெய்யை சூடாக்கி, அதனை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். 
  6. கை பொறுக்கும் சூட்டில், மாவை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சேனை டவா ஃப்ரை | சேனைக்கிழங்கு வறுவல்


தேவையான பொருட்கள்:
  • சேனைக்கிழங்கு – கால் கிலோ
  • புளி – எலுமிச்சை அளவு  
  • இஞ்சி பூண்டு விழுது –  1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  • அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை:
  1. முதலில் புளியை 2 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். 
  2. சேனைக்கிழங்கை தோல் நீக்கி, கழுவி, அகலமான சதுர வில்லைகளாக நறுக்கி வைக்கவும். 
  3. ஒரு பாத்திரத்தில், புளி தண்ணீரை சேர்த்து, அதில்  சேனை துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, கிழங்கை முக்கால் பாகம் வேக வைத்து, கிழங்கை மட்டும் தனியே வடித்து எடுத்துக் கொள்ளவும். 
  4. ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சோம்புத்தூள், அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
  5. இத்துடன் வேக வைத்த சேனை துண்டுகளை சேர்த்து, மசாலாவில் நன்கு புரட்டி, கால் மணி நேரம் ஊற விடவும். 
  6. ஒரு நான் ஸ்டிக் டவாவில், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், சேனை துண்டுகளை சேர்த்து, இரு புறமும் திருப்பி விட்டு ஷாலோ ஃப்ரை செய்து எடுத்து பரிமாறவும்.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பேபி பொடடோ ஃப்ரை| சிறு உருளைகிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்:
  • பேபி பொடடோ – 250 கி
  • பூண்டு (நசுக்கியது) – 1 டீஸ்பூன்  
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்  
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்  
  • சாட் மசாலா – அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
  • தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
  1. முதலில் பேபி பொடடோவை நன்றாக கழுவி, தண்ணீர் சேர்த்து ப்ரெஷர் குக்கரில் வேக வைத்து கொள்ளவும். 
  2. ஆறியவுடன், தோலுரித்து, மேலே  கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துக் கலக்கவும்.
  3. இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.  
  4. ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊற வைத்த உருளைகிழங்கு கலவையை அப்படியே சேர்க்கவும். நன்றாக எண்ணெயில் வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.
  5. இடையிடையே கிளறி விட்டு மசாலா நன்றாக சேர்ந்து வறுவலாக வந்தவுடன் இறக்கவும். 

ஞாயிறு, 21 ஜூன், 2015

ராகி புட்டு| கேழ்வரகு புட்டு

ராகி புட்டு| கேழ்வரகு புட்டு
தேவையான பொருட்கள்:
  • ராகி மாவு – 1 கப்
  • உப்பு – சிறிதளவு
  • நெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • துருவிய தேங்காய் – ½ கப்
  • சர்க்கரை – ½ கப்
  • ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்


செய்முறை:
  1. முதலில் ராகி மாவை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். 
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும்.
  3. ஒரு அகலமான பேசினில் சூடான ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 
  4. இத்துடன் கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு மாவை பிசிறவும். 
  5. இந்த மாவை ஆவியில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
  6. வேக வைத்த ராகி மாவுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.  

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு | கருப்பு கொண்டைக்கடலை கறி

செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு | கருப்பு கொண்டைக்கடலை கறி என்றவுடனே அனைவருக்கும் கேரளப்  புட்டும், கடலைக் கறியும் தான் ஞாபகத்தில் வரும். நான் இங்கு கொடுத்திருக்கும் ரெசிபி, செட்டிநாடு சமையலை அடிப்படையாகக் கொண்டது. இது சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
  • கருப்பு கொண்டக்கடலை – 150 கி
  • பெரிய  வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
  • பூண்டு (நசுக்கியது) – 3 பல்
  • தக்காளி (பொடியாக நறுக்கியது)– 2
  • மிளகாய் தூள்  – 2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:
  • தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
  • கசகசா – கால் டீஸ்பூன்
  • முந்திரி (விரும்பினால்) – 5  

தாளிக்க:
  • எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • பட்டை  – 1” துண்டு
  • சோம்பு  – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
  1. கொண்டைகடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
  3. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். 
  5. பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்  தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 
  6. இத்துடன்  மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, வேக வைத்த கொண்டைகடலை சேர்க்கவும். இத்துடன் 1 கப்  தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும். 
  7. பிறகு  உப்பு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி, தோசை, ரொட்டி போன்ற டிபன் ஐட்டங்களுடன் தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.


லேபல்கள்: சைவ சமையல் குறிப்புகள், செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி?, கொட்டை வகை குழம்புகள், கொட்டை வகைகள், நீரிழிவு நோய்க்கான சமையல் குறிப்புகள்.
செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு ரெசிபியை ஆங்கிலத்தில் அறிய  http://ranistreat.blogspot.in/2014/06/chettinad-kondaikadalai-kuzhambu-black.html செல்லவும்.

ஞாயிறு, 15 ஜூன், 2014

செட்டிநாடு நண்டு மசாலா | நண்டு மிளகு மசாலா

தமிழில் எழுத ஆசைப்பட்டு இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். வாரம் ஒரு பதிவாவது இடம் பெற வேண்டும் என்று எண்ணுவதோடு சரி. இப்போதெல்லாம் ஆங்கில வலைபதிவிலேயே வாரம் ஒரு போஸ்ட் தான் செய்கிறேன். வீடு, ஆபீஸ் என்று வேலை சரியாக இருக்கிறது.

இப்போல்லாம் பேஸ்புக்ல ரொம்ப பேமஸான ஓட்டல்கள்ள பிரியாணிய  பல்லியோட பரிமாறுரதையும், கிரேவில ஈ கிடக்குறதையும் போட்டோவா எடுத்து போடுறாங்க! எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் நான்-வெஜ் சாப்பிடத்தான் அதிகமா ஓட்டலுக்கு போறாங்க. என்னோட அட்வைஸ் என்னன்னா அடிக்கடி ஓட்டல் செல்வதை குறைத்துக் கொண்டு, பிடிச்ச அயிட்டங்கள வீட்டிலேயே செய்ய பழகி சாப்பிடலாம். அதுக்காகத் தான் ரொம்ப ருசியான செட்டிநாடு நண்டு மசாலா | நண்டு மிளகு மசாலாவுக்கான செய்முறையை இங்கே கொடுத்திருக்கேன். இதை செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க!
தேவையான பொருள்கள்:

  • நண்டு  - 500 கி
  • பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1  
  •  தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2 அல்லது 3  
  • மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
  • தேங்காய் – 1 மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3  
  • பூண்டு – 15 பல்
  • மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • கசகசா  - 1 தேக்கரண்டி

தாளிக்க:
  • பட்டை - சிறிய துண்டு
  • கல் பாசி – சிறிது
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – 1  கொத்து
  • எண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

செய்முறை:
  1. முதலில் நண்டு ஓட்டை நீக்கி விட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து, தேவையான சைஸில் துண்டுகளாக்கி வைக்கவும்.
  2. அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி வைத்து கொள்ளவும்.
  3. ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.
  4. பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைத்து வகை வைக்கவும். இடையிடையே  கிளறி விடவும்.
  6. நண்டு நன்றாக வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

சுவையான செட்டிநாடு நண்டு மிளகு மசாலா சாப்பிட தயார்! இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
  • பச்சை மிளகாய் காரத்துக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.

லேபல்கள்: நண்டு சமையல் குறிப்பு, அசைவ சமையல் குறிப்புகள், செட்டிநாடு நண்டு மசாலா செய்வது எப்படி, கடல் உணவு சமையல் குறிப்புகள்

செட்டிநாடு நண்டு மசாலா ரெசிபியை ஆங்கிலத்தில் அறிய   http://ranistreat.blogspot.in/2013/12/chettinad-crab-masala-chettinadu-nandu.html செல்லவும்