சனி, 28 டிசம்பர், 2013

கடலை மாவு சட்னி

கடலை மாவு சட்னியை வெங்காயம், தக்காளி, கடலை மாவு இருந்தா ரொம்ப ஈசியா செஞ்சிடலாம். ஆனா, ருசியில இத அடிச்சிக்க முடியாது! இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகிய ஐட்டங்களுக்கும் பொருத்தமா இருக்கும்.

நீங்களும் செஞ்சு பாருங்களேன்!

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
சிவப்பு மிளகாய்த் தூள் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
சோம்பு – 1 தேக்கரண்டிசெய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் லேசாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கி, பின் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். கடலை மாவைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் சிறு தீயில் வைத்து நன்றாக வதக்கவும். கடலை மாவின் பச்சை வாசனை போனவுடன், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். கடலை மாவு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
மிகவும் எளிதாக செய்யக் கூடிய இந்த கடலை மாவு சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து வகை டிபன் வகைகளுக்கும் ஏற்ற சட்னி!


செவ்வாய், 24 டிசம்பர், 2013

செட்டிநாடு கறி வறுவல்

செட்டிநாடு கறி வறுவல் என்பது மட்டனில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு அசைவ உணவாகும். அசைவ விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த உணவு, மிகவும் சுவையானதும் கூட! சாதம் மற்றும் சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். எங்கள் வீட்டில் இந்த வறுவல் செய்தால் எலும்பு சாம்பார் அல்லது எலும்பு தண்ணிக் குழம்புடன் பரிமாறுவது வழக்கம்!

நீங்களும் செய்து பாருங்களேன்!

தேவையான பொருள்கள்:
மட்டன்   - 250 கி
சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 20
இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மிளகு சீரகத் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:
தேங்காய் – 1 மேசைக்கரண்டி
கசகசா  - 1 தேக்கரண்டி
முந்திரி – 3

தாளிக்க:
பிரியாணி இலை – 1
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி – சிறிது
ஏலக்காய்  - 1
லவங்கம் – 1
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்   - 2
கறிவேப்பிலை – 1  கொத்து
நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி


செய்முறை:
முதலில் மட்டனை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விடவும். அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின், தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும். தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

இந்த வறுவல் அனைத்து சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சப்பாத்தி, பரோட்டா வகைகளுக்குத்  தொட்டும் சாப்பிடலாம்.

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/08/chettinad-kari-varuval-mutton-fry.html  செல்லவும்.


ஞாயிறு, 22 டிசம்பர், 2013

மில்லெட் (சிறு தானியம்) மேனியா ரெசிப்பி போட்டி

மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருக்கும் பகிர்வதற்காக இந்த இடுகையை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்!

“சிப்ஸ் டு செர்ரீஸ்” நடத்திய மில்லெட் (சிறு தானியம்) மேனியா ரெசிப்பி போட்டியில் என்னுடைய ராகி இனிப்பு தட்டைக்கான செய்முறை முதலிடம் பெற்றுள்ளது.  

புதன், 18 டிசம்பர், 2013

மட்டன் கோலா உருண்டை | கொத்துக்கறி உருண்டை | மட்டன் கோப்தா

ராணியின் அறுசுவை விருந்தைப் பார்த்தால் ஒரே இனிப்பு சுவை மட்டும் இருக்கிறது. எனவே இன்று அருமையான, சுவை மிகுந்த, காரமான, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம் “மட்டன் கோளா உருண்டை” – இதன் செய்முறையைப் பார்க்கலாம்.

மட்டன்  கோளா உருண்டை என்றதுமே நினைவுக்கு வருவது எனது பாட்டி தான்! எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்பதால், நாங்கள் பள்ளி   விடுமுறைக்கு செல்லும் போது தவறாமல் குறைந்தது 4 தடவையாவது செய்து தந்து விடுவார். மிகவும் எளிதாக, அப்பளம் பொரிப்பது  போல்  செய்து கொடுப்பார். அந்த அளவு கைப்பக்குவம் மற்றும் பொறுமை, குழந்தைகளுக்கு விரும்பியதை செய்து கொடுப்பதில் ஆர்வம் ... மகிழ்ச்சி... எனது நண்பர், ரமேஷ் எழுதிய “கவிதை பாட்டி” போல் ஒவ்வொருவருக்கும் பாட்டி இருக்கிறார்கள் போலும்! இதைப் பார்க்கும் போது கடவுள் படைத்த யுனிவர்சல் கதாபாத்திரம் பாட்டி என்று தோன்றுகிறது.

சரி... இப்போது செய்முறைக்குச் செல்லலாம்.

தேவையான பொருள்கள்:
மட்டன் கைமா – 150 கி
பட்டை - சிறிய துண்டு
லவங்கம் – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 7
பூண்டு - 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய்    - 3
காய்ந்த மிளகாய்   - 3
தேங்காய் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 150 மிலி
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை:
முதலில் மட்டன் கைமாவை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் 1 மேசைக் கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு போட்டு பொரிந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டைப் போட்டு லேசாக வதக்கவும். பிறகு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் கசகசா சேர்த்து பிரட்டவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தேங்காய் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தண்ணீரில்லாமல் பிழிந்து வைத்த கைமாவைச் சேர்த்து நன்றாக வதக்கவும். மட்டன் சேர்த்தவுடன் தண்ணீர் விடும். அந்தத் தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும். இந்த தண்ணீரிலேயே கைமா வெந்து விடும். வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள் தூள், தேவையான உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாகப் பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு மிதமான சூட்டில் பொறிக்க வேண்டும்.

குறிப்பு:
  •  கைமாவை தண்ணீர் இல்லாமல் வதக்கி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை மாவைத் தனியாக அரைத்து சேர்க்க வேண்டும். இல்லாவிடில் உருண்டைகள் எண்ணையில் பிரிய வாய்ப்பு உள்ளது.
  •   எண்ணெய் சூடான பிறகு மிதமான சூட்டில் கோலாவைப் பொறிக்க வேண்டும். இல்லாவிடில் கோலா கருத்துப் போய் விடும்.
  • கோலாவைப் போட்ட உடன் திருப்பி விடக் கூடாது. கோலா உடைந்து விடும்.
  •  எண்ணெய் அளவிற்குத் தகுந்தார் போல் கோலாவைக் குறைந்த எண்ணிக்கையில் போட்டு பொறிக்க வேண்டும்.
  • கோலாவைப் போட்டவுடன் எண்ணெய் பொங்கி வரும். கோலா வெந்த உடன் நுரை தானாக அடங்கி விடும்.

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/10/mutton-kola-urundai-minced-meat-ball.html  செல்லவும்.

சனி, 14 டிசம்பர், 2013

ராகி இனிப்பு தட்டை | கேழ்வரகு இனிப்பு தட்டை | இனிப்பு கேப்பை தட்டை


கேழ்வரகு / கேப்பை என்று தமிழில் அழைக்கப்படும் தானியம் ஆங்கிலத்தில் பிங்கர் மில்லெட் (Finger Millet) என்று கூறப்படுகிறது. நான் இந்த சிற்றுண்டியை இனிப்பு சேர்த்து செய்த காரணம், குழந்தைகளும் இந்த தானியத்தை விருப்பத்துடன் உண்ண வேண்டும் என்பதற்காகவே! பழங்காலத்தில் தினப்படி உணவாக இருந்த தானியங்கள் இன்று மறந்து, மறைந்து வருகின்றன. நமது இளைய தலைமுறைக்கு தானியங்களின் பயன்களை தெரியப்படுத்தி, அவர்களுக்கு பிடித்த வகையில் உணவு தயாரித்துக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
நானே கண்டறிந்த இந்த செய்முறையை மல்லிகை மகள் என்ற பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது. இதை அனைவரும் செய்து பயனுற வேண்டும் என்பதே எனது ஆசை! எனவே, இதனை எனது வலைப்பதிவிலும் பதிவு செய்கிறேன்!!!
இப்போது செய்முறைக்குச் செல்லலாம்!

தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
பொரிகடலை மாவு – ½ கப்
வெல்லம் – ½ கப்
ஏலக்காய்த் தூள் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:
முதலில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ராகி மற்றும் பொரிகடலை மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை ½ கப் தன்ணீரில் கரைத்து வடிகட்டி, குமிழ்ப் பதத்தில் பாகு காய்ச்சிக்  கொள்ளவும்.
சலித்த மாவுடன் தேங்காய்த் துருவல், எள்ளு மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் வெல்லப் பாகை சிறிது சிறிதாகக் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் மிக மெல்லிய தட்டைகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் தீயைக் குறைத்து மிதமான சூட்டில் தட்டைகளைப் பொரித்தெடுக்கவும்.
சத்தான, சுவையான ராகி இனிப்பு தட்டையைக்  குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும் போது செய்து கொடுத்தால் சுவைத்து உண்பார்கள்! இது குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் கொறிப்பதற்கு ஏற்ற சிற்றுண்டி!

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/12/finger-millet-sweet-crispies-ragi-sweet.html  செல்லவும்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஆப்பிள் பிஸ்தா ஹல்வா

ஆப்பிள் பிஸ்தா ஹல்வா
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் (துருவியது) – 1 கப்
கடலை மாவு – ½ கப்
பிஸ்தா (சிறு துண்டுகளாக்கியது) – கால் கப்
பால் – ½ கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை:
அடி கனமான கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி, கடலை மாவை நிறம் மாறாமல் வாசம் வரும் வரை நன்றாக வறுக்கவும். பிறகு, பெரிதாக துருவிய ஆப்பிளையும் வறுத்த கடலை மாவுடன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். தோல் நீக்கி மிக்சியில் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்த பிஸ்தாவையும், மீதமுள்ள நெய்யையும்  சேர்த்து ஹல்வா பதம் வரும் வரை  கிளறி இறக்கவும்.
ஹல்வாவை நெய் தடவிய தட்டில் ஊற்றி நன்றாக ஆறிய பின் வில்லைகள் போடலாம். இந்த ஹல்வா மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே வில்லைகள் போட சிரமமாக இருந்தால் அப்படியே சாப்பிடலாம்.
இந்த ஹல்வாவை சாப்பிடும் போது ஆப்பிள் துருவல் மற்றும் பிஸ்தா துண்டுகள் அங்கங்கு கிடைப்பதால் மிகவும் வித்தியாசமான,  அசத்தலான சுவையுடன் இருக்கும் இந்த ஆப்பிள் பிஸ்தா ஹல்வா!

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/10/apple-pista-halwa.html  செல்லவும்.


திங்கள், 4 நவம்பர், 2013

சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஜாமூன்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஜாமூன்
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 2
பிரட் தூள் – ½ கப்
மைதா – 3 மேசைக்கரண்டி
சர்க்கரை – ¾ கப்
தண்ணீர் – 1 ½ கப்
ஏலக்காய்த் தூள் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன் பிரட் தூள் மற்றும் மைதா சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய்த் தூள்  சேர்த்து சர்க்கரைப் பாகு தயார் செய்யவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டிய ஜாமூன்களை மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இந்த ஜாமூன்களை சூடான சர்கரைப் பாகில் போட்டு ஊறியதும் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறவும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பிடிக்காத குழந்தைகளும் இந்த ஜாமூனை விரும்பி சாப்பிடுவார்கள்!

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/10/sweet-potato-gulab-jamun-shakarkandi.html செல்லவும்.