திங்கள், 13 ஜனவரி, 2014

சர்க்கரைப் பொங்கல் | சர்கரைப் பொங்கலை பானையில் செய்வது எப்படி?

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இயற்கையைப் போற்றும் தமிழர் மரபினை பறை சாற்றும் பண்டிகை ஆகும். இதை தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான பெயர்களில் கொண்டாடுகிறார்கள். இது மார்கழியின் கடைசி நாளை “போகி” | “மகர சங்கராந்தி” என்றும், பின்னர் “பொங்கல்”, “மாட்டுப்பொங்கல்”, “காணும் பொங்கல்” என்றும் நான்கு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அறுவடைக் காலம் முடிந்த பிறகு கொண்டாடப்படும் பண்டிகையாக அறியப்பட்டாலும், பருவ மழைக்காலம் முடிந்த பிறகு  மக்கள் கொண்டாட ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே  பொங்கல் பண்டிகை!

முந்தைய காலத்தில் புது மண் பானை வாங்கி, புத்தரிசி பொங்கலிட்டு, காய்கறிகள், கரும்பு முதலியவற்றை  சூரியனுக்கு படைப்பது வழக்கமாக இருந்தது. தை முதல் நாளில் பொங்கல் வைப்பதன் தாத்பரியம் என்னவென்றால், பொங்கலிடும் போது பொங்கி வழியும் பால் போல, சந்தோஷமும், அமைதியும், எல்லா வளமும் மக்கள் வாழ்க்கையிலும் ததும்பி வழிய வேண்டும் என்பதே! இத்தகைய பாரம்பரியம் வாய்ந்த பண்டிகை, இப்போது குக்கரில் செய்யும் ஒரு பொங்கலோடு முடிந்து விடுகிறது.


எப்போதும் செய்யும் குக்கர் பொங்கலுக்கும், பொங்கல் அன்று செய்யும் பொங்கலுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா? வாருங்கள், பானையில் பொங்கல் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்வோம். பானை என்றவுடன் மண்பானையில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வெண்கலப்பானை, எவர்சில்வர் பானை எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.


தேவையான பொருட்கள்:
 • பொன்னி பச்சரிசி – 1 கப்
 • பாசிப்பருப்பு – ½ கப்
 • தண்ணீர் – 5 கப்
 • பால் – 1 கப்
 • நசுக்கிய வெல்லம் – 1 கப் (குவித்து அளந்தது)
 • தேங்காய் துருவல் – ½ கப்
 • ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்
 • நெய் – 2 டேபிள்ஸ்பூன்
 • முந்திரி, திராட்சை – தேவையான அளவுசெய்முறை:
 1. முதலில் அரிசியும், பருப்பும் சேர்த்து, நீரில் இரு முறை களைந்துவிட்டு, 5 கப் தண்ணீர் மீண்டும் சேர்த்து, களைந்து தண்ணீரை மட்டும் வடித்து பொங்கல் செய்யும் பானையில் ஊற்றவும்.
 2. பானையை அடுப்பில் வைத்து கால் குப் பால் சேர்த்து அதிகமான தீயில் கொதிக்க விடவும். இந்த தண்ணீர் கொதித்து, பொங்கி பானையின் வாயைத் தாண்டி வெளியே வழியும். இப்போது தான் சிறுவர்களும், பெரியவர்களும் “பொங்கலோ பொங்கல்!” என்று குரலெழுப்புவார்கள்!
 3. இப்போது, தீயைக் குறைத்து, 2 கரண்டி தண்ணீரை வெளியே எடுத்து விட்டு, களைந்து வைத்த அரிசி, பருப்பைப் போட்டு சிறு தீயில் வேக விடவும். அவ்வப்போது, கிளறி விடவும்.
 4. வெல்லத்தை அடுப்பில் வைத்து, ½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டியில் வடித்து வைத்துக் கொள்ளவும்.
 5. முந்திரி, திராட்சையை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
 6. அரிசி வெந்தவுடன், மீதமுள்ள பாலை ஊற்றி நன்றாகக் கிளறவும். பாலை அரிசி இழுத்துக் கொண்டவுடன், வெல்லப் பாகைச் சேர்த்துக் கிளறவும். பொங்கல் பதம் வந்தவுடன், தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள், முந்திரி, திராட்சை மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.பாரம்பரிய முறையில் தயாரித்த சர்க்கரைப் பொங்கல் படையலுக்கு தயாராகி விட்டது. பச்சரிசி சீக்கிரம் வெந்து விடும் என்பதால் இதைத் தயாரிக்க ½ மணி நேரம் போதுமானது.

குறிப்பு:
 • நாம் பொங்கல் செய்யும் அளவுக்கு ஏற்றபடி பானையை தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் பால் பொங்குவது சிரமம். மேலே கூறிய அளவிற்கு 2 லிட்டர் பானையே போதும்.
 • அதிக இனிப்பு வேண்டுபவர்கள் வெல்லத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம். மேலும், பாகு வெல்லம்  பயன்படுத்தும்போது பொங்கலுக்கு நல்ல பிரவுன்  கலர் கிடைக்கும்!


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2014/01/how-to-prepare-sarkarai-pongal-in.html செல்லவும்.

2 கருத்துகள்: