வியாழன், 30 ஜனவரி, 2014

செட்டிநாட்டு பிடிகருணை மசியல்

பிடிகருணை கிழங்கு மசியல் மிகவும் பிரபலமான செட்டிநாடு சமையல் வகையைச் சேர்ந்தது. சென்னையில் பலரும் சேனைக்கிழங்கை கருணை கிழங்கு என்று கூறுகிறார்கள். எனவே பலருக்கு பிடி கருணையைப் பற்றி தெரியவில்லை. பிடி கருணை ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது. சென்னை, பழமுதிர்சோலையில் இந்தக் கிழங்கு எப்போதும் கிடைக்கிறது. இந்த கிழங்கு பிரெஷாக உபயோகப்படுத்தினால் அரிக்கும். எனவே நன்றாகக் காய்ந்தவுடன் சமைக்க பயன்படுத்தலாம். ரொம்பவும் சுவையான இந்த மசியலை செய்வது மிகவும் எளிது.

தேவையான பொருட்கள்:

 • பிடிகருணைக் கிழங்கு – 5
 • வெங்காயம் – 1
 • பூண்டு – 2 பல்
 • பச்சை மிளகாய் – 1
 • தக்காளி – 1
 • சிவப்பு மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
 • மஞ்சள்தூள் – சிறிதளவு
 • புளி –  சிறு கோலி அளவு
 • உப்பு - தேவையான அளவு
தாளிக்க:

 • நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
 • கடுகு – 1 டீஸ்பூன்
 • சீரகம் – 1 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:

 1. கருணைக் கிழங்கை நன்றாக மண் போக கழுவி, குக்கரில் போட்டு கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
 2. புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ப.மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
 3. குக்கரில் பிரஷர் அடங்கியதும், கிழங்கை வெளியே எடுத்து, ஆற வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
 4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.  பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு  சேர்த்து வதக்கவும், இவை  லேசாக வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பின் மசித்த கிழங்கைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.
 5.  பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி வைத்து சிம்மில் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து 5 நிமிடங்கள் சிம்மிலேயே வைத்துக் கிளறி இறக்கவும்.


இது சூடான சாதத்தில் பிசைந்து, பொறித்த அப்பளத்துடன்  சாப்பிட சுவையாக இருக்கும். சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டும் சாப்பிடலாம். வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் மலச்சிக்கல், மூல நோய் போன்றவற்றையும் குணப்படுத்தக் கூடிய பிடிகருணை மசியலை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2014/01/pidi-karunai-masiyal-karunai-kizhangu.html செல்லவும்.

திங்கள், 13 ஜனவரி, 2014

சர்க்கரைப் பொங்கல் | சர்கரைப் பொங்கலை பானையில் செய்வது எப்படி?

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இயற்கையைப் போற்றும் தமிழர் மரபினை பறை சாற்றும் பண்டிகை ஆகும். இதை தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான பெயர்களில் கொண்டாடுகிறார்கள். இது மார்கழியின் கடைசி நாளை “போகி” | “மகர சங்கராந்தி” என்றும், பின்னர் “பொங்கல்”, “மாட்டுப்பொங்கல்”, “காணும் பொங்கல்” என்றும் நான்கு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அறுவடைக் காலம் முடிந்த பிறகு கொண்டாடப்படும் பண்டிகையாக அறியப்பட்டாலும், பருவ மழைக்காலம் முடிந்த பிறகு  மக்கள் கொண்டாட ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே  பொங்கல் பண்டிகை!

முந்தைய காலத்தில் புது மண் பானை வாங்கி, புத்தரிசி பொங்கலிட்டு, காய்கறிகள், கரும்பு முதலியவற்றை  சூரியனுக்கு படைப்பது வழக்கமாக இருந்தது. தை முதல் நாளில் பொங்கல் வைப்பதன் தாத்பரியம் என்னவென்றால், பொங்கலிடும் போது பொங்கி வழியும் பால் போல, சந்தோஷமும், அமைதியும், எல்லா வளமும் மக்கள் வாழ்க்கையிலும் ததும்பி வழிய வேண்டும் என்பதே! இத்தகைய பாரம்பரியம் வாய்ந்த பண்டிகை, இப்போது குக்கரில் செய்யும் ஒரு பொங்கலோடு முடிந்து விடுகிறது.


எப்போதும் செய்யும் குக்கர் பொங்கலுக்கும், பொங்கல் அன்று செய்யும் பொங்கலுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா? வாருங்கள், பானையில் பொங்கல் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்வோம். பானை என்றவுடன் மண்பானையில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வெண்கலப்பானை, எவர்சில்வர் பானை எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.


தேவையான பொருட்கள்:
 • பொன்னி பச்சரிசி – 1 கப்
 • பாசிப்பருப்பு – ½ கப்
 • தண்ணீர் – 5 கப்
 • பால் – 1 கப்
 • நசுக்கிய வெல்லம் – 1 கப் (குவித்து அளந்தது)
 • தேங்காய் துருவல் – ½ கப்
 • ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்
 • நெய் – 2 டேபிள்ஸ்பூன்
 • முந்திரி, திராட்சை – தேவையான அளவுசெய்முறை:
 1. முதலில் அரிசியும், பருப்பும் சேர்த்து, நீரில் இரு முறை களைந்துவிட்டு, 5 கப் தண்ணீர் மீண்டும் சேர்த்து, களைந்து தண்ணீரை மட்டும் வடித்து பொங்கல் செய்யும் பானையில் ஊற்றவும்.
 2. பானையை அடுப்பில் வைத்து கால் குப் பால் சேர்த்து அதிகமான தீயில் கொதிக்க விடவும். இந்த தண்ணீர் கொதித்து, பொங்கி பானையின் வாயைத் தாண்டி வெளியே வழியும். இப்போது தான் சிறுவர்களும், பெரியவர்களும் “பொங்கலோ பொங்கல்!” என்று குரலெழுப்புவார்கள்!
 3. இப்போது, தீயைக் குறைத்து, 2 கரண்டி தண்ணீரை வெளியே எடுத்து விட்டு, களைந்து வைத்த அரிசி, பருப்பைப் போட்டு சிறு தீயில் வேக விடவும். அவ்வப்போது, கிளறி விடவும்.
 4. வெல்லத்தை அடுப்பில் வைத்து, ½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டியில் வடித்து வைத்துக் கொள்ளவும்.
 5. முந்திரி, திராட்சையை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
 6. அரிசி வெந்தவுடன், மீதமுள்ள பாலை ஊற்றி நன்றாகக் கிளறவும். பாலை அரிசி இழுத்துக் கொண்டவுடன், வெல்லப் பாகைச் சேர்த்துக் கிளறவும். பொங்கல் பதம் வந்தவுடன், தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள், முந்திரி, திராட்சை மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.பாரம்பரிய முறையில் தயாரித்த சர்க்கரைப் பொங்கல் படையலுக்கு தயாராகி விட்டது. பச்சரிசி சீக்கிரம் வெந்து விடும் என்பதால் இதைத் தயாரிக்க ½ மணி நேரம் போதுமானது.

குறிப்பு:
 • நாம் பொங்கல் செய்யும் அளவுக்கு ஏற்றபடி பானையை தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் பால் பொங்குவது சிரமம். மேலே கூறிய அளவிற்கு 2 லிட்டர் பானையே போதும்.
 • அதிக இனிப்பு வேண்டுபவர்கள் வெல்லத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம். மேலும், பாகு வெல்லம்  பயன்படுத்தும்போது பொங்கலுக்கு நல்ல பிரவுன்  கலர் கிடைக்கும்!


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2014/01/how-to-prepare-sarkarai-pongal-in.html செல்லவும்.

சனி, 11 ஜனவரி, 2014

எலும்பு சாம்பார் | நெஞ்செலும்பு குழம்பு | எலும்பு குழம்பு


எலும்பு சாம்பார் | நெஞ்செலும்பு குழம்பு | எலும்பு குழம்பு.... நான் இதை ராணிஸ் ட்ரீட்டில் பதிவு செய்த போது, என்னுடைய நண்பர்கள் “பேரைக் கேட்டாலே அதிருது!” என்று கிண்டல் செய்தார்கள்! பிறகு செய்து பார்த்து விட்டு, இப்போது அடிக்கடி செய்வதாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே இதன் சுவை ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்! ஏதோ விளம்பரம் ஞாபகம் வருகிறதா?
சரி... எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு எலும்பில் செய்வார்கள். அதுவும், நெஞ்சு எலும்பில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போது, வீடே மணக்கும். அந்த வாசனையே நமக்கு  பசியைத் தூண்டும் அப்பிடைஸர்! எவ்வளவு சொன்னாலும் புரியாது, அனுபவிச்சா தான் தெரியும்!!
 இந்த எலும்பு சாம்பாருடன் நான் முன்பே பதிவு செய்த செட்டிநாடு கறி வறுவல் மிகவும் பொருத்தமாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான காம்பினேஷன் இது!.

இனி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
 • எலும்பு   - 250 கி
 • முருங்கைக்காய் – 1
 • து.பருப்பு – 50 கி
 • வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1
 • இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
 • தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2
 • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
 • தனியா தூள் –  4 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
 • புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:
 • தேங்காய் – 2 மேசைக்கரண்டி
 • கசகசா  - 1 தேக்கரண்டி
 • மிளகு - 1 தேக்கரண்டி
 • சீரகம் - 1 தேக்கரண்டிதாளிக்க:
 • பிரியாணி இலை – 1
 • பட்டை - சிறிய துண்டு
 • கல் பாசி – சிறிது
 • சோம்பு – 1 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய்   - 2
 • கறிவேப்பிலை – 1  கொத்து
 • நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி


செய்முறை:
 1. எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து  3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும். 
 2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். 
 3. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். பின்  மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.
 4. புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான, மணம் மிகுந்த எலும்பு சாம்பார் | நெஞ்செலும்பு குழம்பு சாப்பிட தயார்! வாழை இலையில், சூடான சாதத்தைப் போட்டு, இந்த சாம்பாரை ஊற்றி செட்டிநாடு கறி வறுவலுடன் சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே தெரியாது! சாதத்தோடு மட்டுமில்லாமல்  இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா உடன் சாப்பிடவும்  சுவையாக இருக்கும்.

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/08/elumbu-sambar-bone-gravy.html செல்லவும்.