சனி, 14 டிசம்பர், 2013

ராகி இனிப்பு தட்டை | கேழ்வரகு இனிப்பு தட்டை | இனிப்பு கேப்பை தட்டை


கேழ்வரகு / கேப்பை என்று தமிழில் அழைக்கப்படும் தானியம் ஆங்கிலத்தில் பிங்கர் மில்லெட் (Finger Millet) என்று கூறப்படுகிறது. நான் இந்த சிற்றுண்டியை இனிப்பு சேர்த்து செய்த காரணம், குழந்தைகளும் இந்த தானியத்தை விருப்பத்துடன் உண்ண வேண்டும் என்பதற்காகவே! பழங்காலத்தில் தினப்படி உணவாக இருந்த தானியங்கள் இன்று மறந்து, மறைந்து வருகின்றன. நமது இளைய தலைமுறைக்கு தானியங்களின் பயன்களை தெரியப்படுத்தி, அவர்களுக்கு பிடித்த வகையில் உணவு தயாரித்துக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
நானே கண்டறிந்த இந்த செய்முறையை மல்லிகை மகள் என்ற பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது. இதை அனைவரும் செய்து பயனுற வேண்டும் என்பதே எனது ஆசை! எனவே, இதனை எனது வலைப்பதிவிலும் பதிவு செய்கிறேன்!!!
இப்போது செய்முறைக்குச் செல்லலாம்!

தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
பொரிகடலை மாவு – ½ கப்
வெல்லம் – ½ கப்
ஏலக்காய்த் தூள் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:
முதலில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ராகி மற்றும் பொரிகடலை மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை ½ கப் தன்ணீரில் கரைத்து வடிகட்டி, குமிழ்ப் பதத்தில் பாகு காய்ச்சிக்  கொள்ளவும்.
சலித்த மாவுடன் தேங்காய்த் துருவல், எள்ளு மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் வெல்லப் பாகை சிறிது சிறிதாகக் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் மிக மெல்லிய தட்டைகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் தீயைக் குறைத்து மிதமான சூட்டில் தட்டைகளைப் பொரித்தெடுக்கவும்.
சத்தான, சுவையான ராகி இனிப்பு தட்டையைக்  குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும் போது செய்து கொடுத்தால் சுவைத்து உண்பார்கள்! இது குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் கொறிப்பதற்கு ஏற்ற சிற்றுண்டி!

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/12/finger-millet-sweet-crispies-ragi-sweet.html  செல்லவும்.

3 கருத்துகள்:

  1. நன்று. இதே போல் தொடர்ந்து நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளை பதிவு செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு