வியாழன், 30 ஜனவரி, 2014

செட்டிநாட்டு பிடிகருணை மசியல்

பிடிகருணை கிழங்கு மசியல் மிகவும் பிரபலமான செட்டிநாடு சமையல் வகையைச் சேர்ந்தது. சென்னையில் பலரும் சேனைக்கிழங்கை கருணை கிழங்கு என்று கூறுகிறார்கள். எனவே பலருக்கு பிடி கருணையைப் பற்றி தெரியவில்லை. பிடி கருணை ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது. சென்னை, பழமுதிர்சோலையில் இந்தக் கிழங்கு எப்போதும் கிடைக்கிறது. இந்த கிழங்கு பிரெஷாக உபயோகப்படுத்தினால் அரிக்கும். எனவே நன்றாகக் காய்ந்தவுடன் சமைக்க பயன்படுத்தலாம். ரொம்பவும் சுவையான இந்த மசியலை செய்வது மிகவும் எளிது.

தேவையான பொருட்கள்:

  • பிடிகருணைக் கிழங்கு – 5
  • வெங்காயம் – 1
  • பூண்டு – 2 பல்
  • பச்சை மிளகாய் – 1
  • தக்காளி – 1
  • சிவப்பு மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – சிறிதளவு
  • புளி –  சிறு கோலி அளவு
  • உப்பு - தேவையான அளவு
தாளிக்க:

  • நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:

  1. கருணைக் கிழங்கை நன்றாக மண் போக கழுவி, குக்கரில் போட்டு கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
  2. புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ப.மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
  3. குக்கரில் பிரஷர் அடங்கியதும், கிழங்கை வெளியே எடுத்து, ஆற வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.  பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு  சேர்த்து வதக்கவும், இவை  லேசாக வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பின் மசித்த கிழங்கைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.
  5.  பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி வைத்து சிம்மில் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து 5 நிமிடங்கள் சிம்மிலேயே வைத்துக் கிளறி இறக்கவும்.


இது சூடான சாதத்தில் பிசைந்து, பொறித்த அப்பளத்துடன்  சாப்பிட சுவையாக இருக்கும். சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டும் சாப்பிடலாம். வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் மலச்சிக்கல், மூல நோய் போன்றவற்றையும் குணப்படுத்தக் கூடிய பிடிகருணை மசியலை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2014/01/pidi-karunai-masiyal-karunai-kizhangu.html செல்லவும்.

2 கருத்துகள்: