பசலைக்கீரையில் செடி
பசலை, கொடி பசலை என பல வகைகள் உள்ளன. நான் ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் செடியில்
முளைக்கும் பசலைக்கீரை அழகிய வயலட் நிறப்
பூக்களுடன் கீரை விற்கும் பெண்மணி வைத்திருந்ததை பார்த்தவுடன் வாங்கினேன். சென்னையில்
இந்த கீரையை அது வரை பார்த்ததில்லை; முதல் முதலாக பார்த்ததில் சந்தோஷம். இந்த கீரையை
தூத்துக்குடியில் இருக்கும் போது ரெகுலராக
கூட்டு மற்றும் ரொட்டி செய்வது வழக்கம். எதை செய்தாலும் அந்த பசலைக்கீரையின்
மிதமான மணத்துடன் மிகவும் அருமையாக இருக்கும். இந்த பசலைக்கீரை பெண்களின்
கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு என்று என் பாட்டி அடிக்கடி கூறுவார். மல்லிகை
மகள் சப்பாத்தி இணைப்புக்காக பசலைக்கீரை சப்பாத்தி செய்முறையை அனுப்பினேன். அதன்
செய்முறை இதோ உங்களுக்காகவும்!
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 1 கப்
- பசலைக்கீரை (பொடியாக நறுக்கியது) – கால் கப்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- ஆம்சூர் தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
- பசலைக்கீரையை நன்றாக கழுவி, ஆய்ந்து, மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய பசலைக்கீரையையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தேவையான தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து மிருதுவான மாவாக பிசைந்து அரை மணி நேரம் கழித்து, உருண்டைகளாக்கி, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி வைத்துக் கொள்ளவும்.
- சூடான தோசைக் கல்லில் இரு புறமும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
இந்த சப்பாத்தி ஆறிய பிறகும் கூட மிருதுவாக இருக்கும். இதனை
சாஸ், வெள்ளை குருமா அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
குறிப்பு: இதே செய்முறையில் மற்ற
பசலைக்கீரையிலும் செய்யலாம்.
தேடினாலும் கிடைக்காத ஒரு உணவு வகை செய்முறைக்கு நன்றி, பசலைக் கீரை பஜ்ஜி அதன் மணத்திற்காகவே நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்கு