எலும்பு சாம்பார் | நெஞ்செலும்பு குழம்பு | எலும்பு குழம்பு.... நான் இதை ராணிஸ் ட்ரீட்டில் பதிவு செய்த
போது, என்னுடைய
நண்பர்கள் “பேரைக் கேட்டாலே அதிருது!” என்று கிண்டல் செய்தார்கள்! பிறகு செய்து
பார்த்து விட்டு, இப்போது அடிக்கடி செய்வதாகக்
கூறுகிறார்கள். உண்மையிலேயே இதன் சுவை ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும்
சுவைக்க தூண்டும்! ஏதோ விளம்பரம் ஞாபகம் வருகிறதா?
சரி... எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு எலும்பில் செய்வார்கள். அதுவும், நெஞ்சு எலும்பில் செய்தால்
மிகவும் சுவையாக இருக்கும். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து
சமைக்கும்போது, வீடே மணக்கும். அந்த வாசனையே நமக்கு பசியைத் தூண்டும் அப்பிடைஸர்! எவ்வளவு
சொன்னாலும் புரியாது, அனுபவிச்சா தான் தெரியும்!!
இந்த எலும்பு சாம்பாருடன்
நான் முன்பே பதிவு செய்த செட்டிநாடு கறி வறுவல் மிகவும் பொருத்தமாக இருக்கும். எங்கள்
வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான காம்பினேஷன் இது!.
இனி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- எலும்பு - 250 கி
- முருங்கைக்காய் – 1
- து.பருப்பு – 50 கி
- வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1
- இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
- தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- தனியா தூள் – 4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
- புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
- தேங்காய் – 2 மேசைக்கரண்டி
- கசகசா - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
- பிரியாணி இலை – 1
- பட்டை - சிறிய துண்டு
- கல் பாசி – சிறிது
- சோம்பு – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை – 1 கொத்து
- நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
- எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும்.
- கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். பின் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.
- புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான, மணம் மிகுந்த எலும்பு சாம்பார் | நெஞ்செலும்பு குழம்பு சாப்பிட தயார்! வாழை இலையில், சூடான சாதத்தைப் போட்டு, இந்த சாம்பாரை ஊற்றி செட்டிநாடு கறி வறுவலுடன் சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே தெரியாது! சாதத்தோடு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி,
பரோட்டா உடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/08/elumbu-sambar-bone-gravy.html செல்லவும்.
பார்றா!. தமிழில் நல்லாத்தான் எழுதுறீங்க.
பதிலளிநீக்குநன்றி, ரமேஷ்!
பதிலளிநீக்கு