ஞாயிறு, 15 ஜூன், 2014

செட்டிநாடு நண்டு மசாலா | நண்டு மிளகு மசாலா

தமிழில் எழுத ஆசைப்பட்டு இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். வாரம் ஒரு பதிவாவது இடம் பெற வேண்டும் என்று எண்ணுவதோடு சரி. இப்போதெல்லாம் ஆங்கில வலைபதிவிலேயே வாரம் ஒரு போஸ்ட் தான் செய்கிறேன். வீடு, ஆபீஸ் என்று வேலை சரியாக இருக்கிறது.

இப்போல்லாம் பேஸ்புக்ல ரொம்ப பேமஸான ஓட்டல்கள்ள பிரியாணிய  பல்லியோட பரிமாறுரதையும், கிரேவில கிடக்குறதையும் போட்டோவா எடுத்து போடுறாங்க! எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் நான்-வெஜ் சாப்பிடத்தான் அதிகமா ஓட்டலுக்கு போறாங்க. என்னோட அட்வைஸ் என்னன்னா அடிக்கடி ஓட்டல் செல்வதை குறைத்துக் கொண்டு, பிடிச்ச அயிட்டங்கள வீட்டிலேயே செய்ய பழகி சாப்பிடலாம். அதுக்காகத் தான் ரொம்ப ருசியான செட்டிநாடு நண்டு மசாலா | நண்டு மிளகு மசாலாவுக்கான செய்முறையை இங்கே கொடுத்திருக்கேன். இதை செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க!
தேவையான பொருள்கள்:

  • நண்டு  - 500 கி
  • பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1  
  •  தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2 அல்லது 3  
  • மஞ்சள் தூள்½ தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
  • தேங்காய் – 1 மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3  
  • பூண்டு – 15 பல்
  • மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • கசகசா  - 1 தேக்கரண்டி

தாளிக்க:
  • பட்டை - சிறிய துண்டு
  • கல் பாசிசிறிது
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – 1  கொத்து
  • எண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

செய்முறை:
  1. முதலில் நண்டு ஓட்டை நீக்கி விட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து, தேவையான சைஸில் துண்டுகளாக்கி வைக்கவும்.
  2. அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி வைத்து கொள்ளவும்.
  3. ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.
  4. பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைத்து வகை வைக்கவும். இடையிடையே  கிளறி விடவும்.
  6. நண்டு நன்றாக வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

சுவையான செட்டிநாடு நண்டு மிளகு மசாலா சாப்பிட தயார்! இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
  • பச்சை மிளகாய் காரத்துக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.

லேபல்கள்: நண்டு சமையல் குறிப்பு, அசைவ சமையல் குறிப்புகள், செட்டிநாடு நண்டு மசாலா செய்வது எப்படி, கடல் உணவு சமையல் குறிப்புகள்

செட்டிநாடு நண்டு மசாலா ரெசிபியை ஆங்கிலத்தில் அறிய   http://ranistreat.blogspot.in/2013/12/chettinad-crab-masala-chettinadu-nandu.html செல்லவும்

1 கருத்து:

  1. நண்டு நன்று. மகிழ்ச்சி மீண்டுன் சந்திப்பதில். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு