புதன், 18 டிசம்பர், 2013

மட்டன் கோலா உருண்டை | கொத்துக்கறி உருண்டை | மட்டன் கோப்தா

ராணியின் அறுசுவை விருந்தைப் பார்த்தால் ஒரே இனிப்பு சுவை மட்டும் இருக்கிறது. எனவே இன்று அருமையான, சுவை மிகுந்த, காரமான, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம் “மட்டன் கோளா உருண்டை” – இதன் செய்முறையைப் பார்க்கலாம்.

மட்டன்  கோளா உருண்டை என்றதுமே நினைவுக்கு வருவது எனது பாட்டி தான்! எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்பதால், நாங்கள் பள்ளி   விடுமுறைக்கு செல்லும் போது தவறாமல் குறைந்தது 4 தடவையாவது செய்து தந்து விடுவார். மிகவும் எளிதாக, அப்பளம் பொரிப்பது  போல்  செய்து கொடுப்பார். அந்த அளவு கைப்பக்குவம் மற்றும் பொறுமை, குழந்தைகளுக்கு விரும்பியதை செய்து கொடுப்பதில் ஆர்வம் ... மகிழ்ச்சி... எனது நண்பர், ரமேஷ் எழுதிய “கவிதை பாட்டி” போல் ஒவ்வொருவருக்கும் பாட்டி இருக்கிறார்கள் போலும்! இதைப் பார்க்கும் போது கடவுள் படைத்த யுனிவர்சல் கதாபாத்திரம் பாட்டி என்று தோன்றுகிறது.

சரி... இப்போது செய்முறைக்குச் செல்லலாம்.

தேவையான பொருள்கள்:
மட்டன் கைமா – 150 கி
பட்டை - சிறிய துண்டு
லவங்கம் – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 7
பூண்டு - 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய்    - 3
காய்ந்த மிளகாய்   - 3
தேங்காய் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 150 மிலி
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை:
முதலில் மட்டன் கைமாவை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் 1 மேசைக் கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு போட்டு பொரிந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டைப் போட்டு லேசாக வதக்கவும். பிறகு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் கசகசா சேர்த்து பிரட்டவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தேங்காய் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தண்ணீரில்லாமல் பிழிந்து வைத்த கைமாவைச் சேர்த்து நன்றாக வதக்கவும். மட்டன் சேர்த்தவுடன் தண்ணீர் விடும். அந்தத் தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும். இந்த தண்ணீரிலேயே கைமா வெந்து விடும். வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள் தூள், தேவையான உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாகப் பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு மிதமான சூட்டில் பொறிக்க வேண்டும்.

குறிப்பு:
  •  கைமாவை தண்ணீர் இல்லாமல் வதக்கி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை மாவைத் தனியாக அரைத்து சேர்க்க வேண்டும். இல்லாவிடில் உருண்டைகள் எண்ணையில் பிரிய வாய்ப்பு உள்ளது.
  •   எண்ணெய் சூடான பிறகு மிதமான சூட்டில் கோலாவைப் பொறிக்க வேண்டும். இல்லாவிடில் கோலா கருத்துப் போய் விடும்.
  • கோலாவைப் போட்ட உடன் திருப்பி விடக் கூடாது. கோலா உடைந்து விடும்.
  •  எண்ணெய் அளவிற்குத் தகுந்தார் போல் கோலாவைக் குறைந்த எண்ணிக்கையில் போட்டு பொறிக்க வேண்டும்.
  • கோலாவைப் போட்டவுடன் எண்ணெய் பொங்கி வரும். கோலா வெந்த உடன் நுரை தானாக அடங்கி விடும்.

இந்த செய்முறையை ஆங்கிலத்தில் அறிய http://ranistreat.blogspot.in/2013/10/mutton-kola-urundai-minced-meat-ball.html  செல்லவும்.

1 கருத்து: